பாகற்காய் ஊறுகாய்
பாகற்காய் என்றாலே கசப்பு என்று பல பேர் அதை தொடுவதே இல்லை .ஆனால் ,பாகற்காய் -ன் கசப்பு தன்மை உடம்பிற்கு பல்வேறு வகையில் பயனுள்ள அருமருந்து .இந்த பாகற்காய் ஊறுகாய் (Bittergourd pickle) செய்வதும் மிக சுலபம் .தவிர ,நாள் பட கசப்பு என்பதே சிறிதும் இருக்காது .
தேவையான பொருட்கள் :
பாகற்காய் -2
நல்லெண்ணெய் -100 கிராம்
மிளகாய் தூள் -காரத்திற்கு ஏற்ப
வெந்தைய பவுடர் -2 டீ ஸ்பூன்
பெருங்காய பவுடர் -1 டீ ஸ்பூன்
கடுகு -1 ஸ்பூன்
கல் உப்பு -சுவைக்கேற்ப அல்லது ஒரு கைப்பிடி .
வினிகர் -150 ml
செய்முறை :
பாகற்காய் நன்றாக கழுவி துடைத்து விட்டு அதை நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விட்டு பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும் .அதை ஈரம் இல்லாத ஒரு பாத்திரத்தில் விட்டு அதோடு கல் உப்பை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும் .
ஒரு 10 நிமிடங்கள் கையால் பிசைந்து விட்டு ,அதை அப்படியே ஒரு நாள் மூடி போட்டு வைத்து விட வேண்டும் .கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தல் மிக நல்லது .
மறுநாள் ,ஒரு கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ,அதில் கடுகை போட்டு பொரிய விடவும் .அடுப்பை சிம்-இல் வைத்து அதில் பெருங்காய தூள் ,வெந்தைய தூள் இவற்றை போட்டு பொரிந்ததும் அதில் மிளகாய் தூள் போட வேண்டும் .
மறு நிமிடமே ஊற வைத்துள்ள பாவக்காயை போட்டு சில நிமிடம் நன்றாக வதக்க வேண்டும் .
பாவக்காய் ஒரு அளவு வதங்கியதும் ,அதில் வினிகரை ஊற்றவும் .
அடுப்பை சிம்-இல் வைத்து வினிகர் வற்றும் வரை நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும் .
வினிகர் முழுவதும் வற்றி எண்ணெய் ஊறுகாயில் இருந்து பிரிந்து வர தொடங்கும் .
நன்கு ஊறுகாய் பதத்திற்கு வந்ததும் ,அடுப்பில் இருந்து இறக்கி ,ஆறவைத்து மீண்டும் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும் .
இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஊறியதும் எடுத்து உபயோக படுத்தலாம் .
குறிப்பு :
பெருங்காய தூள் ,வெந்தய தூள் இவற்றை எண்ணையில் போட்டு பொரிந்த உடனே மிளகாய் தூள் சேர்க்க வேண்டும் .
மிளகாய் தூளை எண்ணையில் போட்டதும் கருக விட கூடாது .உடனே பாவக்காயை சேர்த்து விட வேண்டும் .
வெந்தைய தூள் இல்லை எனில் ,தேவையான வெந்தயத்தை எடுத்து வெறும் வாணலியில் விட்டு கருகாமல் வறுத்து ஆற வைத்து தூள் செய்து கொள்ளலாம் .
மேலே குறிபிட்டுள்ள அளவு படி எண்ணெய் அல்லது வினிகர் தேவை எனில் பாவக்காயை வதக்கும் போது கொஞ்சம் சேர்த்து கொள்ளலாம் .